செய்திகள்

திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பில்லை - கே.எஸ்.அழகிரி

Published On 2019-02-12 06:29 GMT   |   Update On 2019-02-12 06:29 GMT
திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். #KSAlagiri #KamalHaasan
கடலூர்:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கே.எஸ்.அழகிரி, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த கீரப்பாளையத்துக்கு நேற்று மாலை வந்தார். அப்போது காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி, கடைவீதியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர், கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பின்னர் அவர், சேத்துக்கால் செல்லியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து திருப்பணி நத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு கே.எஸ்.அழகிரி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பொதுமக்கள் எங்களது கூட்டணிக்கு மகத்தான ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார். இதனால் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வது குறித்து அறிவிக்காமல் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறி இருக்கிறார்.

மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்கின்ற ஆற்றல் மோடிக்கு கிடையாது. சர்வாதிகார ஆட்சியில் ஜனநாயகவாதிகள் மீது வழக்கு பதிவு செய்வதும், சிறைக்கு அனுப்புவதும் தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #KSAlagiri #KamalHaasan

Tags:    

Similar News