செய்திகள்
ஓசூர் ரோஜா

காதலர் தினத்துக்காக ஓசூர் ரோஜா-ஊட்டி கார்னேசன் மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

Published On 2019-02-06 06:12 GMT   |   Update On 2019-02-06 06:12 GMT
வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது. #ValentinesDay
ஓசூர்:

வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்துக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த ரோஜாவுக்கு அதிக கிராக்கி உண்டு. குறிப்பாக சிவப்பு நிற ரோஜாக்களை வெளிநாட்டு காதலர்கள் வாங்கி தங்களது காதலிகளுக்கு கொடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஒரு கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டப்பயிர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:-

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமைக்குடிலில் விளையும் ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

தாஜ்மகால் எனப்படும் சிவப்பு ரோஜா மலருக்கு அரபு நாடுகளில் அதிக வரவேற்பு காணப்படுகிறது.

இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு வெளிநாடுகளுக்கு 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மலர் சாகுபடி நடைபெற்றது. ஆனால் நடப்பாண்டில் அதிக பனிப்பொழிவு காரணமாக ரோஜா உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால், ஏற்றுமதி இலக்கு ஒரு கோடியாக குறைந்துவிட்டது.

பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்துக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி பணிகள் கடந்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி தொடங்கியது. வரும் 10-ந்தேதி வரை பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஓசூரில் இருந்து ரோஜா மலர்கள் பேக்கிங் செய்யப்பட்டு பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இன்றுவரை 60 சதவீதம் ஏற்றுமதி பணிகள் முடிந்து உள்ளன.

ஒரு ரோஜா மலரின் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓசூரில் இருந்து ரோஜாக்கள் ஏற்றுமதி செய்வது போல ஊட்டியில் இருந்து கார்னேசன் மலர்கள் காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த திருச்சிகடி, கக்கூஜி, தும்மனட்டி, மைநிலை, கொடநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டு மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கார்னேசன், தர்புரா, அஷ்டமரியா ஆகிய மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வெளிநாடு களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.



குறிப்பாக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற மலர்கள் தான் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. காதலை சொல்லும் நிறமாக இந்த 3 நிறங்களும் இருப்பதால் இந்த மலர்களுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது.

இதுகுறித்து மலர் உற்பத்தியாளர் அனுசியா சுந்தர் கூறியதாவது:-

சிவப்பு நிற கார்னேசன் மலர் காதலை சொல்வதற்கு ஒரு சிறந்த மலர் ஆகும். இதனால் அதற்கு மிகுந்த கிராக்கி உண்டு. மிகக்குறைந்த விலையில் அந்த கர்னேசன் மலர் கிடைப்பதால் காதலர்கள் இந்த மலரை வாங்கி காதல் பரிசாக அளிக்கிறார்கள். இந்த கார்னேசன் மலர்கள் ஊட்டியில் இருந்து சென்னை, பெங்களூரு, பூனே ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த கார்னேசன் மலர் ஊட்டியில் அதிக அளவில் பயிரிடப்படுவதால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #ValentinesDay
Tags:    

Similar News