செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தை அமைக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் - பிரபு எம்.எல்.ஏ.

Published On 2019-02-05 14:06 GMT   |   Update On 2019-02-05 14:06 GMT
கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்களை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என பிரபு எம்எல்ஏ கூறியுள்ளார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விழுப்புரத்தில் பிரபு எம்.எல்.ஏ. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மாவட்ட எல்லைகள் வரையறை குறித்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலம் உள்பட பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலகங்கள் உளுந்தூர்பேட்டை அருகே அமைய உள்ளதாக தெரியவருகிறது.

குமரகுரு எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அலுவலகங்களை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே கள்ளக்குறிச்சி பகுதியில் 5 முதல் 10 கி.மீ தூரத்திற்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்களை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேன். நான் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே தமிழக அரசு கள்ளக்குறிச்சி பகுதியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலகங்களை கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு பிரபு எம்.எல்.ஏ. கூறினார். #tamilnews
Tags:    

Similar News