செய்திகள்

அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவுகள்- அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

Published On 2019-02-02 11:35 IST   |   Update On 2019-02-02 11:35:00 IST
அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.14½ கோடி மதிப்பில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை பிரிவுகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
வேலூர்:

வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது.

இங்கு ரூ.14½ கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம், இதய உள்ளுருவி கணிப்பு ஆய்வகம், சிறுநீரக சுத்திகரிப்புப்பிரிவு விரிவாக்கம், ரத்த புரத நோய்கள் ஆய்வகம், காந்தி அதிர்வு பிம்பங்கள் ஆகிய நவீன சிகிச்சை பிரிவுகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாந்திமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜவேலு வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு நவீன சிகிச்சை பிரிவுகளை திறந்து வைத்து பேசினர்.

விழாவில், எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன், ஆவின் தலைவர் வேலழகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ், வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்த அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோரிடம், ‘அரசு விழாக்களில் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனது தொகுதிக்கு உட்பட்ட இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவுகள் தொடங்க வேண்டும் என்று பலமுறை சட்டசபையில் வலியுறுத்தி உள்ளேன். ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்ள எனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அமைச்சர்கள், அடுத்த அரசு விழாவில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.விடம் வந்து, இதுபோன்ற பிரச்சனைகள் இனிமேல் நடைபெறாது என்று கூறினார். அதற்கு அவர், கடந்த அரசு விழாவிலும் இதுபோன்று தான் கூறினீர்கள். தற்போதும் அதே தவறு நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் அரசு விழாக்களில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை வேண்டுமென்றே புறக்கணிக்கிறீர்கள். எனவே நான் இந்த அரசு விழாவை புறக்கணிக்கிறேன் என்று கூறிவிட்டு தனது ஆதரவாளர்களுடன் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவத்தால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News