செய்திகள்

கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் ஊட்டி வருகை

Published On 2019-01-29 04:49 GMT   |   Update On 2019-01-29 04:49 GMT
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் ஊட்டிக்கு வருகை தரஉள்ளார். அப்போது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். #TNGovernor #Banwarilalpurohit
ஊட்டி:

இந்தியாவில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய மண்வள பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், வல்லுனர்களை கொண்டு இயங்கி வருகிறது.

இந்த சங்கம் மற்றும் ஊட்டியில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர்வள தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருதுகளை வழங்குகிறார்.

மண் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு மற்றும் காலநிலை மாற்ற சூழலில் அதன் பன்முக பயன்பாடு, மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மதிப்பீடு செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம், தோட்டக்கலை பயிர்கள், வனங்கள் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், எந்திரமயமாக்கப்பட்ட மண் மற்றும் நீர் வள மேலாண்மை துல்லிய பண்ணையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு உள்பட 10 தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது.

கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

கருத்தரங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய மண்வள பாதுகாப்பு சங்க தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பம் உள்ளவர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். #TNGovernor #Banwarilalpurohit
Tags:    

Similar News