செய்திகள்

2 மாதத்திற்கு மேல் தொடரும் வேலைநிறுத்தம்: பட்டாசு தொழிலாளர்கள் நாளை சாலை மறியல்

Published On 2019-01-08 05:05 GMT   |   Update On 2019-01-08 05:05 GMT
பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி நாளை (9-ந் தேதி) விருதுநகர் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. #FireCrackers

சிவகாசி:

பட்டாசு உற்பத்தி மையமாக இயங்கும் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும், குறிப்பிட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது போன்ற விதிகள் இருந்ததால் பட்டாசு தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.

பட்டாசு தொழிலை காப்பாற்ற விதிகளை தளர்த்த வேண்டுமென வலியுறுத்தி தொழிலாளர்கள் சிவகாசியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 வாரத்திற்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தற்போது வரை பட்டாசு ஆலையை திறப்பதற்கான எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை.

2 மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பட்டாசு தொழிலாளர்கள் கூறுகையில், பல வருடங்களாக பட்டாசு தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறோம். திடீரென வேலை நிறுத்தம் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளோம். வேறு வேலையும் தெரியாது. குடும்பம் நடத்தவே கஷ்டமாக உள்ளது.

எனவே மத்திய மாநில அரசுகள் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பட்டாசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி நாளை (9-ந் தேதி) விருதுநகர் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மகாலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை.

இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை (9-ந் தேதி) சிவகாசி பஸ் நிலையம், திருத்தங்கல், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, மாரனேரி, சாத்தூர், கன்னிச்சேரி, ஆமத்தூர் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. #FireCrackers

Tags:    

Similar News