செய்திகள்

பண்ருட்டியில் நள்ளிரவில் கொள்ளையன் குத்தி கொலை

Published On 2019-01-08 04:49 GMT   |   Update On 2019-01-08 04:49 GMT
பண்ருட்டியில் நள்ளிரவில் கொள்ளையன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பக்கிரி முகமது (வயது45). அதே பகுதியை சேர்ந்தவர் ஜியாவுதீன் (34). நண்பர்களான இவர்கள் 2 பேரும் சேர்ந்து வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக பக்கிரி முகமது, ஜியாவுதீன் மீது கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட போலீஸ்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. பக்கிரி முகமது புதுவையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் ஒரு வழக்கில் பக்கிரி முகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜியாவுதீன் புதுவையில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தார்.

இதனால் ஜியாவுதீனுக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்த நிலையில் ஜெயலில் இருந்து வெளியே வந்த பக்கிரிமுகமது புதுவையில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அப்போது ஜியாவுதீனுக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது அவருக்கு தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பக்கிரிமுகமது, ஜியாவுதீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று மாலை பண்ருட்டி பஸ்நிலையத்தில் இருந்து பக்கிரி முகமது தொலைபேசி மூலம் ஜியாவுதீனை தொடர்பு கொண்டு மது குடிக்க வருமாறு அழைத்தார். உடனே ஜியாவுதீனும் அதை ஏற்று பஸ் நிலையத்துக்கு வந்தார்.

பின்னர் 2 பேரும் பண்ருட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கினர். பண்ருட்டி பனங்காட்டு தெரு பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையில் வைத்து 2 பேரும் மது குடித்தனர். பின்னர் அவர்கள் அங்கேயே படுத்து உறங்கினர்.

நள்ளிரவு கண் விழித்த பக்கிரிமுகமது அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தூங்கி கொண்டிருந்த ஜியாவு தீனை குத்தினார். இதில் திடுக்கிட்டு எழுந்த ஜியாவுதீன் சுதாரித்துக்கொண்டு பக்கிரிமுகமது கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த பக்கிரிமுகமது ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் ஜியாவுதீன் ரத்தக் காயங்களுடன், கையில் கத்தியை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் பக்கிரி முகமது மோட்டார் கொட்டகையில் வைத்து தன்னை கத்தியால் குத்தியதாக ஜியாவுதீன் கூறினார். இதைத் தொடர்ந்து ஜியாவுதீனை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து ஜியாவுதீன் கூறிய தகவலின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் பனங்காட்டு தெரு விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்றனர். அங்கு பக்கிரி முகமது ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பக்கிரிமுகதுவை கத்தியால் குத்தி கொன்ற ஜியா வுதீனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News