செய்திகள்

இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Published On 2018-12-26 09:27 GMT   |   Update On 2018-12-26 09:27 GMT
இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss

சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இது தான் இயற்கை நீதியாகும். ஆனால், இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

இதைக் கண்டித்து 24-ந்தேதி மாலை முதல் பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர். தமிழக அரசோ அவர்களை கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் திடலில் அடைத்தது. அங்கும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் நேற்றிரவு அவர்களை அங்கிருந்து காவல்துறை மூலம் விரட்டியடித்தது.

அதைத்தொடர்ந்து நேற்றிரவு முதல் ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உண்ணாநிலை மேற்கொண்டிருந்த ஆசிரியர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அரசு மனம் இறங்கவில்லை.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த காலங்களில் ஏராளமான போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அப்போதும் ஏராளமானோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மட்டும் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

2009-ம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதால் அவர்களின் ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை பரிந்துரைத்தது. ஆனால், அதையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், மே மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே குறைந்தபட்சம் ரூ.15,500 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களிடையே இவ்வளவு ஊதிய ஏற்றத் தாழ்வு இருப்பது மிகப் பெரிய அநீதி. இதை களைய வேண்டியது அரசின் கடமை. எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை முதல்- அமைச்சர் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #AnbumaniRamadoss

Tags:    

Similar News