செய்திகள்

சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில் கஞ்சா பதுக்கிய வழக்கில் போலீஸ் ஏட்டு சிக்கினார்

Published On 2018-12-24 09:44 GMT   |   Update On 2018-12-24 09:44 GMT
சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில் கஞ்சா பதுக்கிய வழக்கில் போலீஸ் ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை:

சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ராமதுரை.

போலீஸ் நிலையத்தில் ராமதுரை பணியில் இருந்தபோது மெக்கானிக் ஆறுமுகம் என்பவர் சதீஷ், பூமிநாதன் ஆகிய இருவர் மீது புகார் அளித்துள்ளார். தன்னிடம் தகராறு செய்ததாக 2 பேர் மீதும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

இதுபற்றிய விசாரணைக்காக சதீஷ், பூமிநாதன் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சங்கர்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அவர்களது மோட்டார் சைக்கிளில் இருந்து கஞ்சா பொட்டலங்களை ஏட்டு ராமதுரை பறிமுதல் செய்தார்.

இதுபற்றி அவர்களிடம் அவர் விசாரணையும் நடத்தினார். இந்த விவகாரம் பற்றி இன்ஸ்பெக்டர் ஜான் வின்சென்ட் (பொறுப்பு) மேல் விசாரணை மேற் கொண்டார். அப்போது வாலிபர் சதீஷ், பூமிநாதன் இருவரும் கஞ்சா பொட்டலங்களை நாங்கள் பதுக்கி வைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது புகார் கொடுத்த மெக்கானிக் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்களை வைப்பது தெரிய வந்தது.

இதுபற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், “ஏட்டு ராமதுரையின் துணையுடன் எதிராளிகளை பழி வாங்குவதற்காக அவர்களது மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்களை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மெக்கானிக் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். ஏட்டு ராமதுரை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தப்பி ஓடி தலைமறைவான அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் ஏட்டு ராமதுரை மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. அவரை சஸ்பெண்டு செய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News