செய்திகள்

பட்டாசு தொழிலாளர் நலன் காக்க நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் - மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

Published On 2018-11-25 12:48 GMT   |   Update On 2018-11-25 12:48 GMT
பட்டாசு தொழிலாளர் நலன் காக்க நல்ல முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். #FireCrackers #Thirumavalavan

அவனியாபுரம்:

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மற்றும் மத்திய அரசு இணைந்து விரைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் வல்லுநர் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

இந்த நேரத்தில் தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்க மத்திய அரசு முன் வரவேண்டும்.

குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தற்போது தார்ப்பாய் வழங்கப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக ஏற்பாடு. அவர்களுக்கு புயலால் பாதிக்கப்படாத வகையான வீடுகளை கட்டித்தர வேண்டும்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்குவது என்பது போதுமானதாக இல்லை. அவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும். கால் நடைகள் உயிரிழப்பு மற்றும் பயிர் சேதங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது .

எனவே இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

மாசுபடுவதற்கு பட்டாசுகள் மட்டுமே காரணம் இல்லை. மாசில்லாத பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்கு வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. அதற்குரிய ஆய்வு மற்றும் நடைமுறை தொடர்பான வழிகாட்டுதல் தேவை.

எனவே மத்திய அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீதி மன்றம் வழிகாட்டலை தந்தாலும் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #FireCrackers #Thirumavalavan

Tags:    

Similar News