செய்திகள்
வீரசிகாமணி

மேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி

Published On 2018-11-19 10:12 GMT   |   Update On 2018-11-19 10:12 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர்:

மதுரை மாவட்டத்தில் பலர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாள் தோறும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சாலக்கிபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. எலக்ட்ரீசியனான இவருக்கு வீரசிகாமணி (வயது 28) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் வீரசிகாமணி மீண்டும் கர்ப்பமானார். கடந்த சில நாட்களாக அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. மேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து வீரசிகாமணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி வீரசிகாமணி பரிதாபமாக இறந்தார்.

சாலக்கிபட்டியில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதால் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது காய்ச்சலால் கர்ப்பிணி பெண் இறந்திருப்பது அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சுகாதாரத்துறையினர் இனியும் காலதாமதம் செய்யாமல் சாலக்கிபட்டியில் மருத்துவ முகாம் நடத்தி காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News