செய்திகள்
பட்டுக்கோட்டை நகரில் குடிநீர் குழாய்களில் விரிசல்களில் வழியும் தண்ணீரை பிடிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும்

கஜா புயல் பாதிப்பு- பட்டுக்கோட்டை நகரில் தண்ணீர் கேன் ரூ.100-க்கு விற்பனை

Published On 2018-11-17 10:24 GMT   |   Update On 2018-11-17 10:24 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கஜா புயல் பாதிப்பால் ரூ.35-க்கு விற்ற குடிநீர் கேன்கள் தற்போது ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது. #GajaCyclone
பட்டுக்கோட்டை:

கஜா புயலால் பாதிப்பால் டெல்டா மாவட்டங்களில் இன்றும் 3-வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் மட்டுமே மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கிராமங்களில் மின் இணைப்பு சரி செய்யப்படவில்லை. ஆங்காங்கே முறிந்து கிடக்கும் மரங்களால் மின்கம்பங்கள் கீழே விழுந்து கிடக்கின்றன. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கேன்களை வாங்கி மக்கள் சமாளித்து வருகின்றனர்.

தற்போது குடிநீர் கேன்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதிகவிலைக்கு விற்று வருகின்றனர். ரூ.35-க்கு விற்ற குடிநீர் கேன், தற்போது ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கஜா புயலின் ருத்ரதாண்டவத்தால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் காற்றில் முற்றிலும் சேதமானது. நகரில் பெரும்பாலான மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. மின்கம்பங்கள் உடைந்தும், ஒயர்கள் அறுந்தும் கிடக்கின்றன.

பட்டுக்கோட்டை தென்னை சார்ந்த விவசாயம் அதிக அளவில் இருப்பதால் தென்னை மரங்கள் ஆயிரக்கணக்கில் முறிந்து விழுந்துவிட்டன. புயல் கரையை கடந்த பின்பும் பட்டுக்கோட்டை நகர் பகுதிகளில், எந்த தெருவுக்கும் போகமுடியாத நிலையில் மின் கம்பங்களும், பெரிய பெரிய மரங்களும் விழுந்து கிடக்கின்றன. மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள், நகரில் பல இடங்களிலும் விழுந்து சிதறி கிடக்கிறது. நகரில் பொதுமக்கள் வெளியில் வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. தெருக்களில் விழுந்துள்ள மரங்கள் அளவில் பெரிதாக இருப்பதால் பொதுமக்களால் அதனை வெட்டி அப்புறப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். மரம் அறுக்கும் இயந்திரங்கள், மரத்தை அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் செயல்பட்டு மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகத்தை விரைவாக செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை நகரில் 30 ரூபாய் விற்ற தண்ணீர் கேன்கள் 100 முதல் 150 ரூபாய்வரை விற்கின்றனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் உள்ளதால் நகராட்சி குடிநீர் குழாய்களின் விரிசல்களில் வழியும் தண்ணீரை பிடிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. #GajaCyclone
Tags:    

Similar News