செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்வு

Published On 2018-10-22 08:24 GMT   |   Update On 2018-10-22 08:24 GMT
தீபாவளி பண்டிகைக்காக கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி உள்ளனர். #Diwali #OmniBus
கோவை:

கோவையில் இருந்து சென்னைக்கு வழக்கமாக ஆம்னி பஸ்களில் ரூ.700 முதல் ரூ.1200 வரை வசூலிக்கப்படும். ஆனால் ஆயுதபூஜை விடுமுறை முடிந்த நிலையில் நேற்று சென்னைக்கு சென்றவர்களிடம் ரூ.2 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதை விட தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்பதால் டிக்கெட் கட்டணத்தை கூடுதலாக உயர்த்தி உள்ளனர்.

தீபாவளி பண்டிகை 6-ந் தேதி கொண்டாடப்படும் நிலையில் 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதலே ஊருக்கு செல்வார்கள் என்பதால் அன்றைய தினம் டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

முன்பதிவு டிக்கெட்டுகளை பொறுத்தவரை கோவையில் இருந்து சென்னைக்கு தற்போதே ரூ.2,500 வரை வசூலிக்கப்படுகிறது.

இதேபோல கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு வழக்கமாக தனியார் பஸ்களில் ரூ.500 முதல் 900 வரை வசூலிக்கப்படும் நிலையில் தீபாவளி டிக்கெட் கட்டணம் ரூ.900 முதல் ரூ.1500 வரை வசூலிக்கப்படுகிறது.

நாகர்கோவிலுக்கு வழக்கமாக ரூ.600 முதல் ரூ.1000 வரை வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுகிறது. #Diwali #OmniBus
Tags:    

Similar News