செய்திகள்

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம்-சிறை

Published On 2018-10-16 11:04 GMT   |   Update On 2018-10-16 11:10 GMT
எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFishermen #SriLankanCourt
ராமேசுவரம்:

இலங்கை கடல் எல்லைப்பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு இயற்றியது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கை அரசு இயற்றிய சட்டத்தில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.50 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் விசைப்படகுகள் திரும்ப அளிக்கப்படாது போன்ற கடுமையான சரத்துகள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் முதன்முறையாக எல்லை தாண்டி வந்ததாக கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு அபராதம்- சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 18-8-2018-ந் தேதி கடலுக்குச் சென்றனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.

8 பேரும் கல்பெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அத்துமீறி எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

விசாரணையின் முடிவில் 8 மீனவர்களுக்கும் தலா ரூ.60 லட்சம் மற்றும் வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி வரை சிறைத்தண்டனை விதித்து கல்பெட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News