செய்திகள்

ஆந்திராவில் ரூ.10 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மண்ணுளி பாம்பு பறிமுதல் - 4 பேர் கைது

Published On 2018-10-14 12:07 GMT   |   Update On 2018-10-14 12:07 GMT
ஆந்திராவில் ரூ.10 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மண்ணுளி பாம்பு மற்றும் 3 செப்பு தகடுகள் பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் கைது செய்துள்ளனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து திருச்சூருக்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்துவதாக சாலக்குடி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் ஆம்பலூர் என்ற இடத்தில் குறிப்பிட்ட பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் சந்தேகப்படும்படி இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 148 செ.மீட்டர் நீளமுள்ள ஒரு மண்ணுளி பாம்பு இருந்தது. மேலும் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த 3 செப்பு பட்டயமும் சிக்கியது.

அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெசீர் (வயது 34), அப்துல்லா (46), சம்சுதீன் (49), அலி (58) ஆகியோர் என்பது தெரியவந்தது. மண்ணுளி பாம்பு, 3 செப்பு பட்டயங்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்தவர்களை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கூறும்போது, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஒருவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்து மண்ணுளி பாம்பு மற்றும் பட்டயங்களை வாங்கி வருகிறோம். அதனை திருச்சூரில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க கொண்டு செல்லும்போது பிடிபட்டோம் என்று கூறினர்.

இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கப்பட்ட மண்ணுளி பாம்பு எதற்காக கடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News