செய்திகள்
போலி சான்றிதழ் தயாரித்த இளம்பெண் மாசானவடிவை போலீசார் அழைத்து சென்ற காட்சி.

கோர்ட்டில் ஜாமீன் பெற போலி அரசு சான்றிதழ் தயாரித்த இளம்பெண் கைது

Published On 2018-10-09 11:43 GMT   |   Update On 2018-10-09 11:43 GMT
திருப்பூரில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற போலி அரசு சான்றிதழ் தயாரித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூரில் கோர்ட்டில் ஜாமீன் பெற தாசில்தார், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து, அரசு முத்திரையை போலியாக பயன்படுத்துவதாக வடக்கு தாசில்தார் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அரசு முத்திரையை போலியாக தயார் செய்தவர்களை பிடிக்க தாசில்தார் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் மணி என்பவரை பயன்படுத்தினார்.

அதன் படி மணி ஜாமீன் தொடர்பாக ஒரு பெண்ணை அணுகினார். அப்போது அவர் ஜாமீன் தொடர்பாக அரசு அதிகாரிகள் கையெழுத்து, அரசு முத்திரை ஆகியவற்றை நான் பார்த்து கொள்கிறேன். அதற்கு ரூ. 8 ஆயிரம் செலவாகும் என அப்பெண் கூறி உள்ளார்.

தாசில்தார் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மணி இதற்கு ஒப்புக்கொண்டார். முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரத்து 500 -ஐ அப்பெண்ணிடம் கொடுத்தார்.

இன்று மணியை தொடர்பு கொண்ட அப்பெண் ஜாமீன் மனு தயாராகி விட்டது. கோர்ட்டு அருகே வந்து வாங்கி கொள்ளுங்கள் என கூறினார். உடனே மணியும் புறப்பட்டு சென்றார்.

அப்போது அப்பெண் மனுவை கொடுத்தார். அவரை மணி மடக்கி பிடித்தார். பின்னர் அவரை தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.

அவரிடம் சப்- கலெக்டர் ஷ்வரன் குமார், தாசில்தார் ஜெயக்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அப்பெண்ணின் பெயர் மாசான வடிவு (30). திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவரிடம் இருந்து அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டது போன்ற போலி சான்று, போலி அரசு முத்திரை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்த போது கடந்த ஒரு வருடமாக போலி சான்று தயாரித்து வருவதாக தெரிவித்தார்.

தனக்கு உதவியாக மேலும் 5 பேர் இருந்ததாகவும் கூறினார்.

மாசான வடிவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News