செய்திகள்

1200 கன அடி நீர் திறப்பு - கிருஷ்ணா தண்ணீர் பூண்டிக்கு வந்தது

Published On 2018-09-29 07:46 GMT   |   Update On 2018-09-29 07:46 GMT
கண்டலேறு அணையிலிருந்து நேற்று மாலை முதல் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. #Krishnawater #Poondilake
ஊத்துக்கோட்டை:

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு வருடந்தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி கடந்த ஜனவரி 1-ந்தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கபட்டு மார்ச் 26-ந்தேதி நிறுத்தப்பட்டது.

இந்த காலத்தில் 2. 253 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. இந்நிலையில் நீர் வரத்து இல்லாததாலும், கோடை வெயில் காரணத்தாலும் பூண்டி ஏரியில் இருப்பு இருந்த தண்ணீர் வறண்டு விட்டது.

இதன் காரணமாக மே மாத இறுதியில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு, சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து 2-வது தவணையாக ஜூலை மாதத்தில் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

ஆனால் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில் இம்மாத முதல் வாரத்தில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணைக்கு தண்ணீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட்டனர். இந்த நீர் சோமசிலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கண்டலேறு அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இதையடுத்து அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர்.

அதன்படி கடந்த 22-ந் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 350 கன அடியாக உயர்த்தினர்.

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று காலை தமிழக எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட் வந்தடைந்தது. வினாடிக்கு 75 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.

இந்த நீர் 25 கிலோ மிட்டர் தூரம் பாய்ந்து இன்று அதிகாலை பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 70 கனஅடி வீதம் தண்ணீர் சென்றடைகிறது.

இந்நிலையில் கண்டலேறு அணையிலிருந்து நேற்று மாலை முதல் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு இன்று காலை முதல் வினாடிக்கு 352 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் 19 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

கண்டலேறு அணையின் கொள்ளளவு 68 டி.எம்.சி. யாகும். இன்று காலை நிலவரப்படி 12 . 50 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #Krishnawater #Poondilake


Tags:    

Similar News