செய்திகள்
குட்காவுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

பெங்களூருவில் இருந்து லாரியில் ரூ.10 லட்சம் குட்கா கடத்தல் - 3 பேர் கைது

Published On 2018-09-22 05:04 GMT   |   Update On 2018-09-22 05:04 GMT
வாணியம்பாடி அருகே லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். #GutkhaSeized
வாணியம்பாடி:

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், குட்கா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்குந்தியில் உள்ள டோல்கேட்டில் தாலுகா போலீசார் நள்ளிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பெங்களூருவில் இருந்து வேலூர் நோக்கி வந்த சரக்கு லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

லாரியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. லாரியுடன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

பிடிபட்டவர்கள், வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் பாபு (வயது 45), சுமேந்தர் (42), ரங்காராவ் (48) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் கடத்தி வந்த குட்கா பெங்களூருவில் உள்ள குடோனில் இருந்து வேலூருக்கு கொண்டு வரப்பட்டது.

இது முதல் முறையில்லை. பலமுறை பெங்களூரு குடோனில் இருந்து வேலூருக்கு கடத்தி வந்துள்ளனர். வேலூரில் போலீஸ் தொந்தரவு இல்லாத ஒரு இடத்தில் லாரியை நிறுத்தி விடுவார்கள்.

அங்கிருந்து, மாவட்டம் முழுவதும் குட்காவை பிரித்து விற்பனைக்காக அனுப்புவார்கள். இவர்களை பின்னால் நின்று இயக்குவது மிகப்பெரிய கும்பல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

டி.எஸ்.பி. முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், லாரியுடன் சிக்கிய குட்கா விவகாரத்தில் பின்னணியில் உள்ள கும்பல் யார் யார்? என பட்டியல் தயாரித்து அவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.  #GutkhaSeized



Tags:    

Similar News