செய்திகள்

பெருமத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

Published On 2018-09-20 16:04 GMT   |   Update On 2018-09-20 16:04 GMT
பெருமத்தூர் கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். #MinisterVijayabaskar
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள பெருமத்தூர் கிராமத்தில், நீண்ட நாட்களாக பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து பெருமத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு பொதுசுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட துணை இயக்குனர் சம்பத் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசுகையில், “தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 925 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேப்பூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் இப்பகுதி மக்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, அம்மா பெட்டக பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் நியமிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை தரப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி, கர்ணன், சிவப்பிரகாசம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் சேசு நன்றி கூறினார். 
Tags:    

Similar News