செய்திகள்

தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வாலிபர் கைது

Published On 2018-09-18 05:06 GMT   |   Update On 2018-09-18 05:06 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.#PeriyarStatue
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தீவுத்திடல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஆறரை அடி உயர பெரியார் வெண்கல சிலை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலையை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர். பெரியார் சிலையின் தலை பகுதியில் செருப்புகளை வைத்து விட்டு சென்று விட்டனர்.

இந்த சிலை அமைந்துள்ள இடத்தின் அருகில் தான் நீதிபதிகள் மற்றும் தாசில்தார் குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதியில் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு உருவானது.

நேற்று காலை பெரியார் பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தி.மு.க.வினர் மற்றும் திராவிடர் கழகத்தினர் சிலை அவமதிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குற்றவாளிகளை கைது செய்ய கோரி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

பெரியார் சிலையை அவமதித்தவர்களை தாராபுரம் டி.எஸ்.பி. வேலுமணி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக தாராபுரம் அருகே உள்ள ரஞ்சிதா புரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் நவின் குமாரை (28) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நவின் குமார் சேம்பர் உரிமையாளர் ஆவார். அவர் மட்டும் தான் சிலையை அவமதித்தாரா? அல்லது அவருக்கு துணையாக வேறு யாராவது சென்றார்களா? என போலீசார் நவின் குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #PeriyarStatue
Tags:    

Similar News