செய்திகள்

கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தையை கொன்றேன்- கைதான தாய் வாக்குமூலம்

Published On 2018-09-12 16:37 GMT   |   Update On 2018-09-12 16:37 GMT
கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு இரண்டரை வயது குழந்தையை தாய் கொன்ற சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்:

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி தமிழ் இசக்கி (21). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது 2½ வயது பெண் குழந்தை சிவன்யா ஸ்ரீ.

இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையை இவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் நாகராஜ் தாய் தனலட்சுமி கவனித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு நாகராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது மகள் வீட்டின் பின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் சிவன்யா ஸ்ரீயை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தாய் தமிழ் இசக்கி முன்னுக்கு பின் முரணாக பேசினார். தான் வீட்டில் இருந்த போது சில மர்மநபர்கள் வந்து தாக்கியதாகவும், இதில் தான் மயங்கி விட்டதால் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் நாகராஜின் தாயார் தனலட்சுமி தனது பேத்தியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் மருமகள் தமிழ் இசக்கி மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்து இருந்தார்.

இதனையடுத்து போலீசார் தமிழ் இசக்கியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் தனது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்தனர். போலீசாரிடம் தமிழ் இசக்கி கூறியதாவது-

எனது கணவர் நாகராஜூக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனை மாமியார் தான் தீர்த்து வைத்து வந்தார்.

இந்த நிலையில் கணவர் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தகராறு வலுத்தது. எனவே குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொள்ள திட்டம் தீட்டினேன். அதன்படி குழந்தையை பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தேன். பின்னர் நானும் தற்கொலைக்கு முயன்றேன். அந்த நேரத்தில் கணவர் நாகராஜ் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் போனது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

இரண்டரை வயது குழந்தையை தாய் கொன்ற சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News