செய்திகள்

சாலை கட்டுமான பணியில் ஊழல்: காண்டிராக்டர் செய்யாத்துரை வீட்டில் 2-வது நாளாக சோதனை

Published On 2018-09-08 07:37 GMT   |   Update On 2018-09-08 07:37 GMT
காண்டிராக்டர் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் இன்றும் சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #SPK
அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. அரசு சார்பில் நடைபெறும் நெடுஞ்சாலைத்துறை பணிகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார்.

மதுரை, சென்னை, விருதுநகர் என மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான காண்டிராக்ட் பணிகளை இவர் நடத்தி வந்தார்.

அவருக்கு உதவியாக மகன்கள் நாகராஜன், கருப்பசாமி, ஈஸ்வரன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள அலுவலகம், வீடு மற்றும் உறவினர்கள் இல்லங்களிலும் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டையில் உள்ள செய்யாத்துரை வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது ஏராளமான நகைகள், கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. இவை அனைத்தும் அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாத்துரையின் வீட்டில் உள்ள அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென செய்யாத்துரை வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

செய்யாத்துரை மகன் நாகராஜன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துக் கொண்டனர். நள்ளிரவு வரை செய்யாத்துரை, நாகராஜன், கருப்பசாமி, ஈஸ்வரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் தங்களது விசாரணையை முடித்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

இன்று 2-வது நாளாக செய்யாத்துரை வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 5 கார்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ITRaid #SPK
Tags:    

Similar News