செய்திகள்

வாக்காளர் வரைவுப்பட்டியல்- கடலூர் மாவட்டத்தில் 19.98 லட்சம் வாக்காளர்கள்

Published On 2018-09-01 15:38 IST   |   Update On 2018-09-01 15:38:00 IST
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு 2019-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அன்பு செல்வன் வெளியிட்டார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு 2019-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அன்பு செல்வன் வெளியிட்டார்.

இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 10.1.2018 அன்று வெளியிடப்பட்டது.

அந்த வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு கடலூர் மாவட்டத்தின் அப்போதைய மொத்த வாக்காளர் எண்ணிக்கை 20 லட்சத்து 18ஆயிரத்து 16 பேர் ஆகும். அதன் பிறகு சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது. உரிய பரிசீலனைகளுக்கு பின் அவற்றின் மீது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி 19,330 வாக் காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 9 தொகுதிகளிலும் தற்போது 9 லட்சத்து 93 ஆயிரத்து 71 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 5 ஆயிரத்து 515 பெண் வாக்காளர்கள், இதரர் 100 என மொத்தம் 19 லட்சத்து 98 ஆயிரத்து 686 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட 12 ஆயிரத்து 444 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் குமார், தே.மு.தி.க. நகர செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி மாதவன், நகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News