செய்திகள்

நடிகர் செந்தில் உறவினரிடம் 300 பவுன் நகை வழிப்பறி - மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-08-29 08:25 IST   |   Update On 2018-08-29 08:25:00 IST
நடிகர் செந்தில் உறவினரிடம் பட்டப்பகலில் 300 பவுன் நகையை வழிப்பறி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். #JewelRobbery
கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் குருவலிங்கம். அவருடைய மனைவி உமா (வயது 43). இவர்கள் நகைச்சுவை நடிகர் செந்திலின் நெருங்கிய உறவினர்கள். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கமுதி கிளையில் சுமார் 300 பவுன் நகையை உமா லாக்கரில் வைத்திருந்தார்.

வருகிற 30-ந்தேதி அருப்புக்கோட்டையில் நடைபெறும் விழாவில் அணிவதற்காக, லாக்கரில் வைத்த நகைகளை வங்கியில் இருந்து நேற்று மதியம் அவர் எடுத்துச்சென்றார்.

அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், உமாவின் அருகில் சென்று தெரிந்தவர்கள்போல் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள் நகைகள் வைத்திருந்த பையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உமா இதுகுறித்து கமுதி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.

நகை பறித்துச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையே நகையை பறிகொடுத்த உமாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக கூறினார். இதனால் உண்மையிலேயே நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றார்களா? அல்லது உமா நகை பறிபோனதாக நாடகமாடுகிறாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #JewelRobbery

Tags:    

Similar News