செய்திகள்
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.

வெள்ளகோவில் அருகே அணைக்கட்டில் தீவிபத்து- 200 ஏக்கர் மரங்கள் சேதம்

Published On 2018-08-27 11:04 IST   |   Update On 2018-08-27 11:04:00 IST
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 ஏக்கர் பரப்பிலான மரங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் இந்த அணை அமைந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த அணைக்கு நீர்வரத்து இல்லை. பி.ஏ.பி. கால்வாய் மூலம் தான் இந்த அணைக்கு தண்ணீர் வரவேண்டும். ஆனால் கால்வாய்கள் தூர்வாரப்படாதால் அணைக்கு தண்ணீர் வராமல் காய்ந்து கிடந்தது. இதனால் சீமை கருவேல் மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அணை பகுதியில் உள்ள மரங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ மளமளவென பரவியது. இதனால் அணை பகுதியில் வசித்து வந்த மான்கள், மயில்கள் உள்ளிட்டவைகள் கூச்சல் போட்டபடி வெளியேறியது.

இந்த தீ விபத்தை அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அணை பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து சேதம் அடைந்தது.

அணைக்கட்டில் உள்ள மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News