செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை புகாரில் உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம்

Published On 2018-08-24 02:58 GMT   |   Update On 2018-08-24 02:58 GMT
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தொடர்புடைய உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். #ChennaiStudentharassment #AgriCollege
திருவண்ணாமலை:

சென்னையை சேர்ந்த ஒரு மாணவி, திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் படித்து வருகிறார். அந்தக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஒருவர், அந்த மாணவிக்கு அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்; அவருக்கு ஒத்துழைப்பு தருமாறு, அந்த மாணவியிடம் விடுதி காப்பாளர்களாக உள்ள 2 பேராசிரியைகள் செல்போனில் பேசி தொல்லை கொடுத்தனர் என பரபரப்பு புகார் எழுந்து உள்ளது.

இதில் விசாரணை நடத்துவதற்கு பெண் போலீஸ் அதிகாரி வனிதா (கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு) நியமிக்கப்பட்டு உள்ளார்.



இவர் சம்பந்தப்பட்ட மாணவி, உதவி பேராசிரியர், விடுதி காப்பாளர்கள், கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்துகிறார். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வேளாண்மை கல்லூரியின் முதல் மற்றும் இறுதி ஆண்டு மாணவ, மாணவிகள் 50 பேர், பாலியல் தொல்லை புகார் கொடுத்த மாணவிக்கு எதிராகவும், புகாருக்கு ஆளான உதவி பேராசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு ஆதரவாகவும் கல்லூரியின் எதிர்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதலில் அதற்கு உடன்படாதவர்கள், பின்னர் அங்கு இருந்து கலைந்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதன் பின்னர் மீண்டும் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கு மத்தியில் கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்களும் கல்லூரிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மாலை 3 மணியளவில் மீண்டும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டு கல்லூரி முகப்பு பகுதியில் படியில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி நேற்று முன்தினம் போலவே நேற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

2-ம் ஆண்டு தேர்வு நடைபெறுவதால், புகார் கூறிய மாணவி தனது பெற்றோர் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் தேர்வு அறைக்கு சென்றார். தேர்வு முடிந்த பிறகு போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரியில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.

இதற்கிடையில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள உதவி பேராசிரியர் தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதாக கோவை வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் சுதாகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  #ChennaiStudentharassment #AgriCollege
Tags:    

Similar News