செய்திகள்
அடப்பாற்றில் தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் படுத்து போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

அடப்பாற்றில் தண்ணீர் வராததை கண்டித்து ஆற்றில் படுத்து நாகை விவசாயிகள் போராட்டம்

Published On 2018-07-30 04:14 GMT   |   Update On 2018-07-30 04:14 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அடப்பாற்றில் தண்ணீர் வராததை கண்டித்து ஆற்றில் இறங்கி படுத்து போராட்டம் நடத்தினர். #Kallanai #Cauvery
வேதாரண்யம்:

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்த 7 நாட்களுக்குள் வேதராண்யம் அருகே துளசாபுரம் அடப்பாற்றில் தண்ணீர் வந்துவிடும்.

தற்போது 10 நாட்களாகியும் தண்ணீர் வராததால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதனால் வேதாரண்யம் தாலுகாவில் உம்பளச்சேரி, மகாராஜபுரம், கீழ்பாதி, மேல்பாதி, கரியாப் பட்டினம், அண்டகத்துறை, மூலக்கரை, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வராததால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அடப்பாற்றில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கோரி ஆற்றில் இறங்கி படுத்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

வேதாரண்யம் அருகே உம்பளச்சேரி சாக்கை பகுதியில் அடப்பாற்று பாசனத்தை நம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு பணிக்கு வயல்கள் தயாராக உள்ளன. ஆனால் தண்ணீர் வராததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததற்கு காரணம் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரப்படவில்லை. எனவே பொதுப்பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். #Kallanai #Cauvery



Tags:    

Similar News