செய்திகள்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கற்பழிப்பு - 8 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-07-21 10:25 IST   |   Update On 2018-07-21 10:25:00 IST
புதுவையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவான 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #PondicherryGirlharassment
திருக்கனூர்:

சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் கொடுமைப்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுபோல் புதுவையில் 17 வயது சிறுமியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 8 பேர் கும்பல் கற்பழித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

புதுவை ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த சிறுமியின் பாட்டி வீடு விழுப்புரத்தில் உள்ளது.

பாட்டி வீட்டுக்கு அடிக்கடி பஸ்சில் செல்லும் போது வழுதாவூரை சேர்ந்த விக்கி (வயது 21) என்ற வாலிபருடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று அதுபோல் அந்த சிறுமி விழுப்புரத்துக்கு சென்ற போது, விக்கி ஆசை வார்த்தை கூறி திருக்கனூரில் உள்ள புதர் நிறைந்த காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது அந்த சிறுமிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.

குளிர்பானத்தை குடித்ததும் அந்த சிறுமி மயங்கி போனார். இதனை பயன்படுத்தி கொண்ட விக்கி அந்த சிறுமியை கற்பழித்தார். மேலும் தனது நண்பர்கள் 7 பேருக்கும் அந்த சிறுமியை விருந்தாக்கினார் .

மயக்கம் தெளிந்து விக்கி மற்றும் அவரது நண்பர்களால் சீரழிக்கப்பட்டதை உணர்ந்த அந்த சிறுமி இதுபற்றி புதுவை குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டார். இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரை ஏற்று இதன் மீது விசாரணை நடத்தும்படி திருக்கனூர் போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதன்படி திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் விக்கியுடன் சேர்ந்து சிறுமியை கற்பழித்தவர்கள் திருக்கனூர் மற்றும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான கண்ணதாசன், முகிலன், சூர்யா, மற்றொரு சூர்யா, தேவா, ஜனா, அசோக் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள அவர்கள் 8 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். #PondicherryGirlharassment
 
Tags:    

Similar News