செய்திகள்

பழனி கோவில் சிலை மோசடி விவகாரம் - முக்கிய பிரமுகர்கள் சிக்கியதால் டி.எஸ்.பி. இடமாற்றம்

Published On 2018-07-01 05:18 GMT   |   Update On 2018-07-01 05:18 GMT
பழனி கோவில் சிலை மோசடி விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் சிக்கியதால் டி.எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #Idolsmuggling

பழனி:

பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை கடந்த 2004-ம் ஆண்டு புதிதாக வடிவமைக்கப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. கருணாகரன் மற்றும் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

குறிப்பாக டி.எஸ்.பி. கருணாகரன் 2 மாதமாக பழனியில் முகாமிட்டு குருக்கள் மற்றும் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற் கொண்டார்.

இவ்வழக்கு தொடர்பாக தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா, அதிகாரிகள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

நேர்மையான முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் திடீரென சி.பி.சி.ஐ.டி.க்கு சிலை கடதல் வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் சிலை கடத்தல் பிரிவு போலீசாரே விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது டி.எஸ்.பி. கருணாகரன் கோவை மின் திருட்டு தடுப்பு பிரிவுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பழனி டி.எஸ்.பி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் சிலை கடத்தல் வழக்கில் சிக்கியதால் டி.எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளார். நேர்மையான முறையில் சிலை கடத்தலை வெளிகொண்டு வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டிலும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு அரசு தரவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

கோர்ட்டு உத்தரவால் மீண்டும் சிலை கடத்தல் பிரிவு போலீசாரே விசாரித்ததால் பல உண்மைகள் வெளிவந்து குற்றவாளிகளை நெருங்கிய நிலையில் இந்த இடமாற்றம் நடந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிலை மோசடி வழக்கில் முக்கிய புள்ளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். மீண்டும் டி.எஸ்.பி. கருணாகரனே விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும் என்றனர். #Idolsmuggling

Tags:    

Similar News