செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவிக்கு சென்னையில் குரல் பரிசோதனை

Published On 2018-06-27 13:36 IST   |   Update On 2018-06-27 13:36:00 IST
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி சோதனை நடத்த இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
மதுரை:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய மதுரை ஐகோர்ட்டு கிளை குரல் மாதிரி பரிசோதனையை நடத்த உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து நிர்மலாதேவிக்கு குரல் மாதிரி சோதனை நடத்த இன்று காலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

நாளை (28-ந் தேதி) அவருக்கு மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துணை இயக்குநர் முன் குரல் பரிசோதனை எடுக்கப்பட உள்ளது. இந்த சோதனை முடிந்தபின் நாளை மறுநாள் நிர்மலாதேவி மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுவார்.

குரல் மாதிரி பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின் மதுரை ஐகோர்ட்டு கிளையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதனை தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News