செய்திகள்

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரூ.24 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

Published On 2018-06-27 04:59 GMT   |   Update On 2018-06-27 04:59 GMT
கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரூ.24 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். #HawalaMoney

கோவை:

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு துறை பறக்கும் படை இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் அதிகாரிகள் கோவை வாளையார் சோதனைசாவடியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கோவையில் இருந்து வேகமாக வந்த ஒரு வேனை சைகை காட்டி நிறுத்த முயன்றனர். ஆனால் வேன் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து மதுவிலக்கு துறை பறக்கும் படையினர் அந்த வேனை விரட்டி சென்றனர். அப்போது கூட்டுபாதை என்ற இடத்தில் போலீசார் அந்த வேனை மடக்கினர்.

பின்னர் வேனில் இருந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். விசாரணையில் அவர் எர்ணாகுளத்தை சேர்ந்த சுக்கூர் என்பது தெரியவந்தது. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது டிரைவர் சீட்டுக்கு அடியில் ஒரு ரகசிய அறை அமைத்து அதில் கட்டுக்கட்டாக புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் ரூ.24 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சுக்கூரிடம் கேட்டபோது கோவையில் இருந்து பெரும்பாவூருக்கு பணத்தை கடத்தி செல்வதாக தெரிவித்தார். மேலும் இது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுக்கூர் கைது செய்யப்பட்டு பணம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது. #HawalaMoney

Tags:    

Similar News