செய்திகள்

பெண்ணாடம் அருகே ஆந்திரா பெண்ணை உருட்டு கட்டையால் தலையில் தாக்கிய வாலிபர்கள்

Published On 2018-06-23 11:05 GMT   |   Update On 2018-06-23 11:05 GMT
குழந்தை கடத்த வந்ததாக நினைத்து ஆந்திரா பெண்ணை உருட்டு கட்டையால் வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணாடம்:

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 61). இவர் நேற்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள வாள்பட்டறையில் வெகு நேரமாக சுற்றித் திரிந்தார்.

அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மாணவ-மாணவிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் லட்சுமி பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று லட்சுமியிடம் கேட்டனர். லட்சுமிக்கு தமிழ் தெரியாது. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. தெலுங்கில் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து லட்சுமி குழந்தை கடத்த வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்த வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். அதில் சிலர் உருட்டு கட்டையாலும் லட்சுமியின் தலையில் அடித்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். லட்சுமியை மீட்டு பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய சேலைகளை வாங்கி அதனை விற்பனை செய்வதற்காக கடலூர் மாவட்டத்துக்கு வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே லட்சுமி இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதையறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், திட்டக்குடி துணைபோலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சம்பவம் நடந்த இடமான வாள்பட்டறை பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்றனர். லட்சுமியை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் லட்சுமி இறந்த தகவல் உண்மைதானா? என்று பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு கேட்டனர். அதில் லட்சுமி இறக்கவில்லை என்றும், ஆஸ்பத்திரியில் மயக்கமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

லட்சுமியை தாக்கியவர்கள் யார்? என்பதை கண்டறிய வாள்பட்டறை பஸ்நிறுத்தம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து லட்சுமியை தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து வாள்பட்டறை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News