செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் 2 நாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

Published On 2018-06-19 04:03 GMT   |   Update On 2018-06-19 04:03 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் 2 நாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறினார். #sterlite #Sulfuricacid
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கோனார்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறை சார்பில் புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் சீருடைகள் மாற்றப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையான வண்ண வண்ண சீருடை அணிந்து மாணவர்கள் செல்கிறார்கள்.

ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கந்தக அமிலம் வாயு கசிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

இன்னும் 2 நாட்களில் அவை முற்றிலும் அகற்றப்பட்டுவிடும். தூத்துக்குடி மக்கள் கவலைப்பட வேண்டாம். அச்சப்படவும் வேண்டாம்.

சேலம்-சென்னை, சேலம்-கோவை இடையே அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலை மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். இந்த பசுமை சாலை அமைந்தால் சேலத்தில் இருந்து 4 மணி நேரத்தில் சென்னைக்கு சென்றுவிடலாம்.

ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கங்கணத்துடன் எதிர்க்கட்சியினர் மக்களை தூண்டி விடுகிறார்கள்.

இந்த திட்டத்தால் ஏற்படும் இழப்புகளை அரசு ஏற்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிதி வழங்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார். #sterlite #Sulfuricacid

Tags:    

Similar News