செய்திகள்

வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் சேவை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் - அதிகாரிகள் பேட்டி

Published On 2018-05-30 14:30 IST   |   Update On 2018-05-30 14:30:00 IST
வண்ணாரப்பேட்டை மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் சேவை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். #chennaimetrotrain

சென்னை:

மெட்ரோ ரெயில் தலைமை பொது மேலாளர் வி.கே.சிங், இயக்குனர் நரசிம்ம பிரசாத் ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்ட்ரல், எழும்பூர் மற்றும் டி.எம்.எஸ் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதை தொடர்ந்து பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இலவச பயணம் அறிவிக்கப்பட்டதால் மக்கள் உற்சாகமாக பயணம் செய்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

கட்டணத்தை நாங்கள் குறைக்க முடியாது. இதற்கான ஆணையம் தான் முடிவு செய்யும். 5 நாட்கள் எந்தவித அசம்பாவித சம்பவமும் இல்லாமல் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்தனர். மெட்ரோ ரெயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு நிலையத்திலும் 50 முதல் 60 வரை சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பெண் பயணிகள் பாதுகாப்பு அவசியம் என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்.

சென்னையில் சுரங்கப் பாதையும், ரெயில் நிலையங்களும் அதிகம் உள்ளதால் மற்ற நகரங்களை விட திட்டச் செலவு அதிகமாகும். அதனால் மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக உள்ளது.

வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ்., ஏ.ஜி ஆபிஸ் வரையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வருடஇறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சேவை தொடங்கும். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் விரிவாக்க திட்டப் பணிகள் எல்லாம் முடிந்து முழுமையான மெட்ரோ ரெயில் சேவை 2020 மார்ச் மாதம் நடைபெறும்.

2வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித் தடங்களில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைத்து விடும். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டு செயல் படுத்தும் போது மெட்ரோ ரெயிலில் தினமும் 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். #chennaimetrotrain

Tags:    

Similar News