செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் 8 ஆயிரம் மீனவர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்

Published On 2018-05-28 06:26 GMT   |   Update On 2018-05-28 06:26 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.#SterliteProtest
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஏற்கனவே துப்பாக்கி சூடு நடைபெற்ற கடந்த 22-ந்தேதியே மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து தூத்துக்குடியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தியிருந்தார்கள். இன்று அவர்கள் 7-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் மீனவர்கள் பலரும் காயம் அடைந்தார்கள். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இதனால் தொடர்ந்து மீனவர்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் நெல்லை மாவட்ட மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, பெருமணல் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள மக்கள் இடிந்தகரையிலும், கூடங்குளத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கடந்த 23-ந்தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை,. இன்று 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களது படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டு உள்ளது.#SterliteProtest
Tags:    

Similar News