செய்திகள்

காடுவெட்டி குரு மரணம்: விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் பஸ்களை உடைத்த வழக்கில் 62 பேர் கைது

Published On 2018-05-27 12:55 GMT   |   Update On 2018-05-27 12:55 GMT
குருவின் மறைவையொட்டி கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் தொடர்புடைய 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்:

பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இறந்தார்.

குருவின் மறைவையொட்டி கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், திண்டிவனம், திருநாவலூர், கள்ளக் குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்கள் கல்வீசி தாக்கியதில் தனியார் பஸ்கள் உள்பட 20 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன.

மேலும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி போன்ற பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றன.

நேற்று மாலையில் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில், கடலூர், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், ரெட்டிச் சாவடி உள்பட பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்கள் கல்வீசி தாக்கியதில் 16 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

மேலும் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, போன்ற பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பஸ்களை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News