செய்திகள்

குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டியை கொன்ற 37 பேர் கோர்ட்டில் ஆஜர்

Published On 2018-05-24 07:38 GMT   |   Update On 2018-05-24 07:38 GMT
குழந்தை கடத்தல் பீதியில் சென்னை மூதாட்டியை கொன்ற 37 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை மேலும் 15 நாட்களுக்கு நீடித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
போளூர்:

சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) மற்றும் அவரது மருமகன் கஜேந்திரன் (45) உள்பட உறவினர்கள் 5 பேர், கடந்த 9-ந் தேதி போளூர் தண்ணீர்பந்தலில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

போளூருக்கு முன்புள்ள தம்புகொட்டான் பாறை கிராமத்தில் காரை நிறுத்தி வழி கேட்டனர். அப்போது, குழந்தை கடத்தும் கும்பல் என தவறாக எண்ணி கிராம மக்கள் கத்தி கூச்சலிட்டனர். எதற்கு ‘வம்பு’ நின்று காரை எடுத்து கொண்டு புறப்பட்ட அவர்களின் காரை களியம் கிராமத்தில் மடக்கினர்.

காரில் இருந்த ருக்மணி உள்ளிட்ட 5 பேரையும் கீழே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கினர். காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் மூதாட்டி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கஜேந்திரன் உள்பட மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் அத்திமூர் மற்றும் களியம், தம்புகொட்டான் பாறை, கணேசபுரம், காமாட்சிபுரம், ஜம்பங்கிபுரம், இந்திராநகர், ஏரிக் கொல்லைமேடு, திண்டிவனம் உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த 117 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் 42 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கைது நடவடிக்கைக்கு பயந்து அத்திமூர், களியம் உள்ளிட்ட 11 கிராமங்களையும் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூருக்கு தப்பி ஓடி விட்டனர்.

இந்த நிலையில், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட 42 பேரில், 37 பேரின் காவல் முடிந்ததையடுத்து, இன்று போலீஸ் பாதுகாப்புடன் 37 பேரும் போளூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

37 பேரின் காவலையும், மேலும் 15 நாட்களுக்கு நீடித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 37 பேரும் மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News