செய்திகள்

வானூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-05-24 05:30 GMT   |   Update On 2018-05-24 05:30 GMT
வானூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது பூத்துறை கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 52). இவர் வானூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது மனைவி உஷா (48).

முரளியுடன் அவரது தந்தை திருக்காமு (55), தாய் வசந்தி (75) ஆகியோரும் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் வீடு பழமை வாய்ந்த அரண்மனை போன்ற பல அறைகளை கொண்டதாகும். வீட்டின் பின்புறம் சவுக்கு தோப்பும், தென்னந்தோப்பும் உள்ளது.

நேற்று இரவு வீட்டின் வரண்டா பகுதியில் முரளியும், அவரது தந்தை திருக்காமும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். வீட்டில் உள்ள மற்றொரு அறையில் உஷாவும், வசந்தியும் தூங்கினர்.

இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம மனிதன் தோட்டத்தின் வழியாக வந்து வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்தான்.

பின்னர் வீட்டுக்குள் புகுந்து அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.65 ஆயிரத்தை திருடினான். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 73 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தான்.

அதன் பிறகு உஷா தூங்கி கொண்டிருந்த அறைக்கு சென்றான். அவரின் கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலிச்செயினை அறுத்தான். திடுக்கிட்டு எழுந்த உஷா வீட்டுக்குள் மர்ம மனிதன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வசந்தி மற்றும் முரளி, திருக்காமு ஆகியோர் எழுந்து ஓடி வந்தனர். அதற்குள் நகையை பறித்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

இது குறித்து வானூர் போலீசில் முரளி புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்- இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், பரசுராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் ஜட்டி மட்டும் அணிந் திருந்ததாக கூறப்படுகிறது.

கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர். பூத்துறை கிராமத்தில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும், ஆடு-மாடுகள் திருட்டுப்போவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, அந்த கிராமத்தில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News