செய்திகள்

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜனதா தலைமைக்கு பரிந்துரை - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

Published On 2018-05-14 09:46 IST   |   Update On 2018-05-14 09:46:00 IST
பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க பா.ஜனதா தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்து இருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கப்படும். முதல் கட்டமாக நான்கு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்படும்.

பெண் பத்திரிகையாளரை பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது குறித்து தமிழக காவல் துறையினரிடம்தான் கேட்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தூய்மை கங்கா திட்டம் போல் தூய்மை தாமிரபரணி திட்டம் உருவாக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தி தாமிரபரணி புஷ்கரணி விழா நடத்தப்பட இருக்கிறது.

2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற பிரதமரின் கருத்து தவறாக புரியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டால் ஒவ்வொரு இந்தியருக்கும் தனிப்பட்ட முறையில் ரூ.15 லட்சம் அளவிலான நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்பதைதான் பிரதமர் அப்படி கூறினார். இதை கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் கேட்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

‘நீட்‘ தேர்வில் தமிழக அளவில் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு உள்ளனர். ‘நீட்‘ தேர்வு என்பது கிராமத்தில் உள்ள ஏழை மாணவன் கூட மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கொண்டு வரப்பட்டது. இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் செலுத்துவது தடுக்கப்படும்.

தமிழக அரசு, பா.ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தவறான கருத்து. எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை குறை கூறும் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசை இதுவரை ஏன் கண்டிக்கவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை நாங்கள் இப்போதே தொடங்கி விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News