செய்திகள்
கணேசன்- ராஜீ

நாகை- கீழ்வேளூரில் மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி

Published On 2018-05-08 11:57 IST   |   Update On 2018-05-08 11:57:00 IST
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மின்சாரம் தாக்கியதில் சகோதரர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்வேளூர்:

நாகை அடுத்த கீழ்வேளூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). கொத்தனார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு மணிகண்டன் (11) என்ற மகன் உள்ளான்.

கணேசனின் தம்பி ராஜீ (30). கொத்தனாரான இவர் மனைவி விஜயாவுடன் கீழ்வேளூரை அடுத்த பாதகுறிச்சியில் வசித்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இன்று அதிகாலை கீழ்வேளூர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது.

இந்த நிலையில் கணேசன், தனது வீட்டில் டி.வி. சுவீட்சை சரிசெய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர்  மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கி அண்ணன் பலியான தகவல் தெரிந்து ராஜீ அதிர்ச்சி அடைந்தார். அண்ணன் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அண்ணன் உடலுக்கு மாலை அணிவிப்பதற்காக கடைவீதிக்கு ராஜீ சென்றார். பின்னர் மாலை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது சம்பவம் பற்றி கேள்விப்பட்டு கீழ்வேளூர் போலீசார், கணேசன் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதனால் போலீசாரிடம் அண்ணன் கணேசன், மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தை அழுதுக் கொண்டே ராஜீ கூறினார். பின்னர் அண்ணன் கணேசன், எப்படி டி.வி. சுவிட்சில் கையை வைத்தார்? மின்சாரம் தாக்கியது எப்படி? என்று போலீசார் முன்பு ராஜீ நடித்து காட்டினார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ராஜீவை மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

ராஜீ மின்சாரம் தாக்கி பலியானதை கண்டு போலீசாரும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அண்ணன் இறந்த சோகம் மறைவதற்குள் தம்பியும் மின்சாரம் தாக்கி இறந்தது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அண்ணன்-தம்பி இருவரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நாகை கீழ்வேளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

Similar News