செய்திகள்

உலக செஸ் போட்டியில் காரைக்குடி மாணவி சாம்பியன்

Published On 2018-05-06 16:52 GMT   |   Update On 2018-05-06 16:52 GMT
ஐரோப்பாவில் நடந்த உலக அளவிலான செஸ் போட்டியில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 1-ம் வகுப்பு மாணவி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
காரைக்குடி:

ஐரோப்பா கண்டத்தில் உள்ள அல்பேனியா நாட்டின் டூரெஸ் நகரில் பள்ளி குழந்தைகளுக்கான உலக அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 40 நாடுகளை சேர்ந்த 387 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் 21 பேர் பங்கேற்றனர். இதில் 7 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவி லக்‌ஷனா(வயது 6) உள்பட 5 பேர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் லக்‌ஷனா அபாரமாக விளையாடி 9-8 என்ற புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தங்கப்பதக்கத்தையும், உலக சாம்பியனுக்கான கோப்பையையும் அவர் பெற்றார்.

சாதனை படைத்த மாணவி லக்‌ஷனாவையும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த மாணவியின் பெற்றோர் சுப்பிரமணியன்-கற்பகம் ஆகியோரையும், பயிற்சியாளர் அதுலனையும் பள்ளி சேர்மன் குமரேசன், முதல்வர் ரமேஷ் மற்றும் ஆசிரிய-ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் பாராட்டினர்.

இதுகுறித்து பள்ளி சேர்மன் குமரேசன் கூறுகையில், மாணவி லக்‌ஷனா சிறுவயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றதை கவுரவிக்கும் வகையில் லக்‌ஷனா உருவப்படம் பொறித்த அடையாள அட்டைகளையே செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ-மாணவிகள் அணிவார்கள். லக்‌ஷனாவின் ஆர்வம், வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு ஆகியவை அவரது சாதனைக்கு துணை நிற்கின்றன. லக்‌ஷனாவின் மூத்த சகோதரி இந்திரா பிரியதர்ஷினி ஏற்கனவே தேசிய அளவில் செஸ் போட்டியில் சாதனை புரிந்துள்ளார் என்றார். 
Tags:    

Similar News