செய்திகள்

என்ஜீனியரிங் படிப்புக்கு ஆன்லைன் முன்பதிவு 10 ஆயிரத்தை தாண்டியது

Published On 2018-05-04 10:51 GMT   |   Update On 2018-05-04 10:51 GMT
என்ஜீனியரிங் படிப்புக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. உதவி மையங்களை விட வெளியில் அதிக மாணவர்கள் பதிவு செய்கிறார்கள். #AnnaUniversity

சென்னை:

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இந்த வருடம் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் பதிவு நேற்று தொடங்கியது. இந்த மாதம் 30-ந் தேதி வரை பதிவு செய்யலாம். முதல் நாளில் (நேற்று மாலை 6 மணி நிலவரப்படி) 7420 பேர் பதிவு செய்திருந்தனர்.

42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் வீடுகளில் இருந்தும், ஸ்மார்ட் போன் வழியாகவும் கம்ப்யூட்டர் மையங்கள் மூலமாகவும் அதிகளவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வழியாக 24 மணி நேரமும் மாணவர்கள் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட நேரம் என்பதில்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை எளிதாக இருப்பதாக மாணவ, மாணவிகள் வரவேற்று உள்ளனர்.

நகர்புற மாணவர்களை போல, கிராமப்புற மாணவர்களும் எளிதாக பதிவு செய்யக்கூடிய வகையில் அண்ணா பல்கலைக்கழகம் விதிமுறைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி உள்ளது.

அதனால் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு முடிவு வருவதற்கு முன்பே அதிகளவு விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.

உதவி மையங்களுக்கு சென்று பதிவு செய்வதை விட வீடுகளில் இருந்து அதிகம் பேர் பதிவு செய்து வருகிறார்கள். இதனால் இந்த எண்ணிக்கை இன்று காலை 9 மணி நிலவரப்படி 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-

“ஆன்லைனில் விண்ணப்பிக்க எளிமையான நடைமுறைகள் கிராமப்புற மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பின்பற்றப்படுகின்றன.

விண்ணப்பத்தினை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்கள் கூட தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளை படித்தாலே எளிதாக ஆங்கிலத்தில் பதிவு செய்து விடலாம்.

கிராமப்புற மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் வழிகாட்டு தகவல்கள், அறிவுரைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த போதிலும் பெரும்பாலும் வெளியில்தான் அதிகளவு பதிவு செய்து வருகிறார்கள்.

வீடுகளில் லேப்-டாப், கம்ப்யூட்டர் வழியாகவும், ஸ்மார்ட் போன் மூலமாகவும் அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது” என்றார். #AnnaUniversity

Tags:    

Similar News