செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான குழாய் பதிப்பு - இயக்குனர் கவுதமன், பொதுமக்கள் முற்றுகை

Published On 2018-05-03 07:50 GMT   |   Update On 2018-05-03 07:50 GMT
சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான குழாய் பதித்துள்ள இடத்தை முற்றுகையிட்டு இயக்குனர் கவுதமன், பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் பகுதிக்குட்பட்ட கிளியனூரில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் அங்கு குழாய் பதிக்கப்பட்டது. இதையறிந்த திரைப்பட இயக்குனர் கவுதமன், மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட விவசாயிகள், இளைஞர்கள் உள்பட பலர் சம்பந்தபட்ட இடத்தை பார்வையிட்டு கிராம மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

பின்னர் அனைவரும் குழாய் பதித்துள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கவுதமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக கதிராமங்கலத்தில் அமைத்துள்ள குழாய்களைவிட இங்கு அமைக்கப்பட்ட குழாய் பெரியது. இந்த இடத்தில் குழாய் அமைக்கும்போது இப்பகுதியில் உள்ள மக்களை 6 மாதம் வரை இப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

குழாய் அமைக்க அடிப்படை வேலைகள் நடந்தபோது அதில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை குடித்த அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இந்தபகுதி பொதுமக்கள் பலருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் குறித்து கடலூர் மாவட்ட மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதை மக்களுக்கு ஏற்படுத்துவோம். ராணுவமே வந்தாலும் எதிர்கொள்வோம்.

எங்களுக்கு ‘நீட்’ தேர்வு வேண்டாம் நீர் தான் வேண்டும் என மத்திய அரசை கண்டித்து உணர்வுப்பூர்வமாக மக்கள் போராடி வருகிறார்கள்.

தமிழக அரசு சுற்றுச்சூழலை கெடுக்கும் திட்டங்களை வரவேற்று கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. ஒரத்தூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தை நடத்துவோம். தமிழகத்தை பாலைவனமாக்கும் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News