செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷின் குடும்பத்தினருக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆறுதல்

Published On 2018-05-03 04:08 GMT   |   Update On 2018-05-03 04:08 GMT
தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷ் நல்லசிவனின் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆறுதல் கூறினார்.
சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை அடுத்த கே.ரெட்டியபட்டியை சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் நல்லசிவன். பிளஸ்-2 மாணவரான இவர் நேற்று காலை தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சொல்லி நெல்லை ரெயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தினேஷ் நல்லசிவனின் உடல் அவரது சொந்த ஊரான கே.ரெட்டியபட்டியில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், நிஜாம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர் தினேஷ் நல்லசிவனின் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டு டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று தமிழகத்தின் கண்களை திறந்து வைத்துள்ளார். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மதுக்கடைகளை மூட வேண்டும். குடி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மறுவாழ்வு அளித்து குடிபழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும்.

டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகி விடும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது பாம்புக்கடிக்கு பாம்பின் விஷம் மருந்து என்பதால் பாம்பை விட்டு கொத்த விடுவது போல் உள்ளது. மதுக்கடைகளை மூடி விட்டு கள்ளசாராயம் வராமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். மேலும் தினேஷ் நல்லசிவனின் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News