செய்திகள்

குட்கா ஆலை விவகாரம்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது

Published On 2018-05-02 10:46 GMT   |   Update On 2018-05-02 10:46 GMT
கோவை குட்கா ஆலை விவகாரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவகத்தை முற்றுகையிட்ட ஆயிக்கணக்கான திமுகவினரை போலீசார் கைது செய்தனர். #Gutka

கோவை:

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா ஆலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆலை மேலாளரான ரகுராம் மற்றும் வடமாநில ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை உரிமையாளரான அமித்ஜெயினை கைது செய்ய தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.

இதற்கிடையே ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. நிர்வாகிகள் கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளருமான தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர பொறுப்பாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கபிலன், மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர் சுரேஷ் மற்றும் பாப்பம்பட்டி பரமசிவம், ராவத்தூர் செல்வராஜ் ஆகிய 7 பேரை நள்ளிரவில் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட மேலும் 3 பேர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக்கோரி முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். போராட்டத்துக்கு திரண்டு வருமாறு சமூக வலைதளங்களிலும் அழைப்பு விடுத்து தகவல்களை பரப்பினர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சட்டம்-ஒழுங்கு போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் என 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர்.

போலீசார் அனைவரும் காலை 7 மணிக்கு ரெட் கிராஸ் அலுவலகம் முன்பு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டிய இடங்களை அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து அவினாசி சாலை, ஸ்டேட் வங்கி சாலை, பஸ், ரெயில் நிலையங்கள் உள்பட நகரின் முக்கிய பகுதிகளுக்கு போலீசார் பிரித்து அனுப்பப்பட்டனர்.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம், அ.தி.மு.க. அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், தெற்கு தாலுகா அலுவலகம் முன்புறம் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பையும் மீறி இன்று காலை 11 மணியளவில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டனர்.

அவர்கள் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போடாதே, போடாதே தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடாதே என்று கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து பொங்கலூர் பழனிசாமி, மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முத்துசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார், மூத்த வக்கீல் தண்டபாணி மற்றும் சிலர் போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. முற்றுகை போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. தி.மு.க.வினர் 30 நிமிடத்துக்கும் மேல் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். தி.மு.க. போராட்டம் காரணமாக அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

இதேபோல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் அணி, அணியாக ஊர்வலமாக திரண்டு வந்தனர். அவர்கள் ஆங்காங்கே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.

மேலும் முற்றுகை போராட்டத்துக்காக வீட்டில் இருந்து புறப்பட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீடு முன்பே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தமிழ்மணி வீடு பொள்ளாச்சி மகாலிங்க புரத்தில் உள்ளது. காலை 10 மணி அளவில் முற்றுகை போராட்டத்துக்கு செல்வதற்காக தமிழ்மணி மற்றும் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. வினர் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பொள்ளாச்சி நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் வீடு குமரன்நகரில் உள்ளது. அவரும், அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.வினரும் முற்றுகை போராட்டத்துக்கு புறப்பட்ட போது போலீசார் கைது செய்தனர்.

இதேபோல காளப்பட்டியில் பையாக் கவுண்டர் மற்றும் நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு சென்ற வழியில் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து மாநகருக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் எல்லையில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் தி.மு.க.வினர் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவர்களை கைது செய்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். #tamilnews #Gutka

Tags:    

Similar News