செய்திகள்

கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2018-05-02 06:45 GMT   |   Update On 2018-05-02 06:45 GMT
குரும்பூரில் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குரும்பூர்:

குரும்பூர் அம்மன்புரத்தில் பலவேசக்கார சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இதையயொட்டி நேற்று காலை முதல் இன்று மதியம் வரை 5 நேரம் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு அன்னதானத்தில் இட்லி வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 18 பேர் உடனடியாக திருச்செந்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் 7 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மேலும் சென்னையை சேர்ந்த முரளிதரன்(வயது 28), செல்வம்(30), மாடசாமி(62), சாந்தா(62), அம்பிகா(70), ஆறுமுகம்(80), நம்பிராஜன் (55). பாளையை சேர்ந்த செல்வராஜ்(43), முருகன் (40), அம்மன்புரத்தை சேர்ந்த திரவியம்(52), தனலட்சுமி(53) உள்ளிட்ட 11 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பொன்ரவி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை ஆர்.டி.ஓ. தங்கவேலு பார்த்து பின்னர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் சிறிதளவு பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சோனகன் விளை, காயாமொழியை சேர்ந்த மருத்துவகுழுவினர் குரும்பூரில் முகாமிட்டு மருத்துவ உதவி அளித்து வருகின்றனர். இதையடுத்து இன்று நடைபெற இருந்த அன்னதானம் நிறுத்தப்பட்டது. மேலும் நேற்று இரவு வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
Tags:    

Similar News