செய்திகள்

ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு- நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்தது - மக்கள் போராட்டம்

Published On 2018-04-28 12:07 GMT   |   Update On 2018-04-28 12:07 GMT
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு 4 ஏக்கர் நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்ததால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். #ONGC #protest

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ஆய்வால் நிலத்தடி நீர் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முதல் அந்த பகுதி மக்கள் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கதிராமங்கலம் வெள்ளாந்தெரு மயான சாலை பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறுவதாக தகவல் பரவியது. இதனால் கதிராமங்கலத்தில் வசித்து வரும் பொதுமக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தங்கள் கிராமத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோ‌ஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி, போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்பாபு. வருவாய் ஆய்வாளர் வினோதினி ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குழாயில் கச்சா எண்ணெய் சப்ளை செய்வதை நிறுத்தினர். இதனால் கசிவு ஏற்பட்ட பகுதியில் கச்சா எண்ணெய் வெளியேறுவது தடுக்கப்பட்டது. இருப்பினும் நேற்று மதியம் முதல் கச்சா எண்ணெய் வெளியேறியதால் அந்த பகுதியில் உள்ள சுமார் 4 ஏக்கர் நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்தது.

இதுகுறித்து தாசில்தார் ராஜேஸ்வரி கூறுகையில், ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வயலில் கசிவதை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளோம். இது குறித்து விசாரித்து அரசுக்கு அறிவித்து உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்வோம் என்றார்.

Tags:    

Similar News