செய்திகள்

மேட்டுப்பாளையம் பவானி ஆறு மாசுபடுவதை தடுக்காவிட்டால் போராட்டம்- அய்யாக்கண்ணு அறிவிப்பு

Published On 2018-04-28 12:04 GMT   |   Update On 2018-04-28 12:04 GMT
பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம்:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர்அய்யாக்கண்ணு நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரி விவசாயிகள் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அய்யாக்கண்ணு நேற்று காலை மேட்டுப்பாளையம் வந்தார். அண்ணாஜி ரோடு மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தார். அதன் பின்னர் மேட்டுப்பாளையம் சமயபுரத்தில் உள்ள பவானி கதவணை நீர் மின் நிலையம் 1 க்கு சென்றார். அங்கு மின் உற்பத்திக்காக கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டு இருப்பதையும் பவானி ஆற்றில் கழிவு நீர் தேங்கி நிற்பதையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து அய்யாக்கண்ணு மேட்டுப்பாளையம் கரட்டுமேட்டில் உள்ள பவானி கதவணை நீர் மின் நிலையம் இரண்டை பார்வையிடச் சென்றார். ஆனால் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் கேட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டார்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவிறக்குப் பின்னர் நீர் மின் நிலையத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தடுப்பணை என்ற பெயரில் ஒரு அணையைகட்டி அதனை 24 மணி நேரமும் இயக்காமல் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தான் இயக்குகின்றார்கள் தடுப்பணை என்ற பெயரில் இரண்டு புறமும் சுவர் கட்டாமல் தேக்கப்படும் தண்ணீர் முழுவதும் வயலுக்கு போகிறது. மரங்கள் எல்லாம் காய்ந்து போகிறது. பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளா விட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் வக்கீல் சிவசுரேஷ் பாஷா வொயட்பாபு சாமிநாதன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இருந்தனர். #tamilnews

Tags:    

Similar News