செய்திகள்

தரங்கம்பாடி அருகே பள்ளி வேன் சக்கரம் ஏறி 1½ வயது குழந்தை பலி

Published On 2018-04-13 13:42 IST   |   Update On 2018-04-13 13:42:00 IST
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பள்ளி வாகனம் சக்கரம் ஏறி 1½ வயது குழந்தை பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாகப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மனிஷா(8) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 2-வது மகள் சுபிக்ஷா(1½).

மனிஷா தினமும் காலை வீட்டிலிருந்து பள்ளி வேனில் பள்ளிக்கு சென்று வரவது வழக்கம்.

இன்று காலையும் மனிஷாவை அழைத்து செல்ல நாகப்பன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு பள்ளி வேன் வந்தது. கார்த்திகேயன் வேனில் மனிஷாவை வேனில் ஏற்றிவிட்டார்.

அப்போது வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுபிக்ஷா, அக்கா பள்ளிக்கு செல்வதை கண்டு ஓடிவந்து வேனில் பக்கவாட்டில் சக்கரத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள்.

இதை வேன் டிரைவர், கார்த்திகேயன் ஆகியோர் கவனிக்கவில்லையாம்.

இந்த நிலையில் பள்ளி டிரைவர் , வேனை ஓட்டி செல்ல கிளம்பினார். அப்போது வேன் சக்கரம் அருகே நின்றிருந்த சிறுமி சுபிக்ஷா மீது சக்கரம் ஏறியது. இதில் சக்கரத்தின் அடியில் சிக்கிய குழந்தை சுபிக்ஷா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தாள். இதைக்கண்ட அவரது பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறி துடித்தனர்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பொறையார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளி சென்ற அக்காவை காண ஓடிவந்த குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Similar News