செய்திகள்

மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Published On 2018-04-06 14:54 IST   |   Update On 2018-04-06 14:54:00 IST
மாமல்லபுரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி தொடங்கி வைக்கிறார்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நடக்கிறது.

இதற்காக சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் 480 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

11-ந் தேதி ராணுவ தடவாள உற்பத்திகள் பற்றி சர்வதேச நிறுவனங்களின் கலந்துரையாடல் நடக்கிறது. மறுநாள் 12-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் கண்காட்சி திடல் அருகே பிரதமர் மோடி வந்து இறங்குகிறார்.

பின்னர் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் சென்று கண்காட்சி திடல் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கொடி கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து தரைப்படை, விமானப்படை, கப்பல்படை, கடலோர காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று வீர சாகச நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்து உரையாற்றுகிறார்.

இந்த கண்காட்சியில் பங்கேற்று உரையாற்ற அமெரிக்கா, ரஷியா, ஆப்கானிஸ்தான், பிரிட்டன், பின்லாந்து, மடகஸ்கார், இத்தாலி, நேபாளம், மியான்மர், கொரிய குடியரசு, போர்ச்சுக்கல், வியட்நாம், ஷீசெல்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அமைச்சர்களும் வருகின்றனர்.

மேலும் சர்வதேச ராணுவ தடவாள உற்பத்தி நிறுவனங்களான போயிங், லாக்கன் மாட்டீன், ஏர்பஸ், ஷாபு, ரோசன், போரன் எக்ஸ்போர்ட், ரெப்லி, யுனைடெட் ஷிப்பில்டிங், பி.ஏ.இ, சிஸ்டம்ஸ், வாட்சிலா, சய்பெட், ரோடி, ‌ஷவாஸ் போன்ற நிறுவனங்களும் பங்கு பெறுகிறது.

அவர்களது தயாரிப்பு இயந்திரங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். 5 போர் கப்பல்களை கண்காட்சி அருகே கடலில் நிறுத்த ஒத்திகை நடந்து வருகிறது.

ராணுவ கண்காட்சியை 14-ந்தேதி பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்கு ரூ.100 கட்டணம். அனுமதி சீட்டை பெற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த கண்காட்சி கடைசியாக 2016-ல் கோவாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews

Similar News